நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது
x
தினத்தந்தி 15 May 2023 2:00 AM IST (Updated: 15 May 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எந்த வகையிலும் பாதிக்காது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோயம்புத்தூர்

கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எந்த வகையிலும் பாதிக்காது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ் உயிர் எழுத்துகளை சொல்லி எடுத்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்கிறது. அங்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கட்சி தலைமை ஆராயும்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது.

மேலும் மக்களிடம் இன்னும் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள இது உதவும்.

இந்த தேர்தல் முடிவை வைத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேறுமாதிரியான கனவு கொண்டு இருக்கிறார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். தமிழகத்தில் தி.மு.க.வை மக்கள் பலமுறை புறக்கணித்து இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் பாதிக்காது

கர்நாடகாவில் தற்போது மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பட்டியல் இன மக்களின் பிரச்சினைக்கு திருமாவளவன், தான் இருக்கும் கூட்டணியில் தீர்வு காண முடியவில்லை. எனவே அவர் அந்த கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜனதா கூட்டணிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story