ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு ஐ.டி.ஐ. முடித்தவர்களும் தகுதியானவர்கள்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு  ஐ.டி.ஐ. முடித்தவர்களும் தகுதியானவர்கள்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்தவர்களும் தகுதியானவர்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்தவர்களும் தகுதியானவர்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ரோடு இன்ஸ்பெக்டர் பணி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அமுதவாணன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா ராமசாமியாபுரத்தை சேர்ந்த இளங்கோவன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஜனவரி மாதம் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு 761 காலி இடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதற்கான தகுதியாக கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் அந்த பிரிவில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்று உள்ளதால், ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தோம். ஆனால் இந்த பணிக்கு என்ஜினீயரிங், டிப்ளமோ முடித்தவர்கள்தான் தகுதியானவர்கள் என்று கூறி, அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

தடை விதிக்க வேண்டும்

விதிமுறைகளின்படியும், அரசு ஊழியர்கள் சட்டத்தின்படியும் இந்த நடைமுறை சட்டவிரோதமானது. இதனால் எங்களை போன்ற பலரின் அரசு வேலை கனவு என்பது நனவாகமலேயே போய்விடுகிறது. எனவே சட்டப்படி கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களுக்கும் ரோடு இன்ஸ்பெக்டர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். டிப்ளமோ, என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோதம்

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை கல்வித்தகுதியின்படிதான் அரசு பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் பிரிவு-68 கூறுகிறது.

ஆனால் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் இந்த பிரிவை பின்பற்றாமல், பிரிவு 25-ஐ பயன்படுத்தி ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு என்ஜினீயரிங், டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இது சட்டவிரோதம். ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியான ஐ.டி.ஐ. முடித்த மனுதாரர்களுக்கும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

தகுதியானவர்கள்

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ரோடு இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தை பொறுத்த வரை, கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்த சான்றிதழ் கட்டாயம் என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நேரடி டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து உள்ளனர். இதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இது ஏற்புடையதல்ல.

எனவே கட்டிட பட வரைவாளர் பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மனுதாரர்கள் ரோடு இன்ஸ்பெக்டர் பணிக்கு விதிமுறைகளின்படி தகுதியானவர்கள். எனவே அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story