காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் அடித்துக்கொலை: 5 பேர் கைது
கரூர் அருகே காதல் பிரச்சினையில் ஐ.டி.ஐ. மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோ டிரைவருடன் காதல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் குருபிரகாஷ் (வயது 19). இவர் அய்யர்மலையில் உள்ள குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லையாம். இதற்கிடையில் அந்த மாணவி, குளித்தலை அருகே உள்ள கீழ குட்டப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அருண்குமார் (21) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மன்னிப்பு கேட்க மறுப்பு
இந்தநிலையில் குருபிரகாஷ் தான் காதலித்து வந்த அந்த மாணவியிடம் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி அருண்குமாரிடம் கூறியதால் கடந்த 14-ந்தேதி குருபிரகாஷ் மற்றும் அருண்குமார் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை மனதில் வைத்துக் கொண்டு அருண்குமாரின் தம்பி சங்கரும், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் செல்லதுரை (19) ஆகிய 2 பேரும், அருண்குமாரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனக்கூறி கல்லூரிக்கு சென்று குருபிரகாசை அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தகராறு
இந்தநிலையில் நேற்று முன்தினம் குருபிரகாஷ் அவரது பெரியப்பா மகன் விக்னேஷ் (16) மற்றும் கணக்கப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த சிலர் அய்யர்மலை கடைவீதி பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அருண்குமார், செல்லதுரை, அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் குளித்தலை அருகே உள்ள கண்டியூரை சேர்ந்த விஜய் (19), அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் வை.புதுரை சேர்ந்த சரவணன் (21), கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (20) ஆகியோரும் வந்துள்ளனர். அவர்கள் குருபிரகாஷை திட்டி தாக்கியுள்ளனர்.
அதைத்தடுக்க வந்த விக்னேசையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது கணக்கப்பிள்ளையூரை சேர்ந்த சிலர் அங்கு வருவதை பார்த்த அருண்குமார் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
வழக்கு
இந்ததகராறில் காயம் அடைந்த குருபிரகாஷ் மற்றும் விக்னேசை அவர்களது ஊரை சேர்ந்தவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற விக்னேஷ் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த தகராறு குறித்து குருபிரகாஷ் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அருண்குமார், செல்லதுரை, விஜய், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.
5 பேர் கைது
இந்தநிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக குளித்தலை போலீசார் மாற்றி அருண்குமார், செல்லதுரை, விஜய், சரவணன், சந்தோஷ்குமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த விக்னேஷ் வை.புதூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. கல்லூரியில் எலக்ட்ரீசியன் முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் பிரச்சினை தொடர்பாக நடந்த தகராறில் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.