லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலி
நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலியானார்.
திருவலம் குப்பிரெட்டிதாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மகன் அஜய்கீர்த்தி (வயது 20). ஐ.டி.ஐ. படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் ராஜசேகர் (28). அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தனர். மேல்மொணவூர் அருகே பெருமாள் நகர் என்ற பகுதியில் சாலையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மோட்டார்சைக்கிளில் வந்த அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் மோதினர். இதில் மோட்டார்சைக்கிள் சேதமடைந்து லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டது. அஜய்கீர்த்தி, ராஜசேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அஜய்கீர்த்தி உயிரிழந்தார்.
உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜசேகரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்ததும் அங்கு வந்த விரிஞ்சிபுரம் போலீசார் அஜய்கீர்த்தி உடலை கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.