குடிநீர் தொட்டி கட்டி நாளாச்சு...! குடிநீர் வழங்கலையே...!


குடிநீர் தொட்டி கட்டி நாளாச்சு...! குடிநீர் வழங்கலையே...!
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தொட்டி கட்டி நாளாச்சு...! குடிநீர் வழங்கலையே...! பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாவதாக கிராம மக்கள் புகார் தொிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் தெருவில் சேதமான மேல்நிலை நீர்த்தக்க தொட்டி, எந்த நேரத்திலும் விழுந்து விடும் நிலையில் இருந்தது.

எனவே இதனை இடித்துவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வீணாகும் பொருட்கள்

இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலமாக ரூ.20 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த பணி முடிந்து 5 மாதமாகிறது. மேலும் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டாரும் பொருத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் குழாய்களும் வாங்கப்பட்டது. அதன்பிறகு குழாய்கள் பதிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமலேயே அதற்காக வாங்கப்பட்ட பொருட்கள் வீணாகிறது.

விரைந்து முடிக்கப்படுமா?

அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக விவசாய நிலத்திற்கு சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வருவதையும் காணமுடிகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைகிறார்கள். எனவே குடிநீர் திட்ட பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.


Next Story