வடகாடு பகுதியில் பலாப்பழம் விலை வீழ்ச்சி


வடகாடு பகுதியில் பலாப்பழம் விலை வீழ்ச்சி
x

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

புதுக்கோட்டை

பலா உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், பனங்குளம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, மறமடக்கி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பலா மரங்களை வளர்த்து வருகின்றனர். பலா உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 1½ லட்சம் டன் வரை பலாப்பழ உற்பத்தி இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்களில் சுமார் 40 சதவீதம் பலாப்பழங்களை விவசாயிகளிடம் இருந்து ஒத்தி மற்றும் குத்தகைக்கு ஆண்டு கணக்கில் விவசாயிகள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். மீதமுள்ள 60 சதவீத பலாப்பழங்கள் இப்பகுதிகளில் உள்ள பலா கமிஷன் மண்டிகள் மூலமாக எடை மற்றும் ஏல முறையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ருசி மிகுந்தது

இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் ருசி மிகுந்தது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் மும்பை, கர்நாடகா, ஆந்திரா, வளைகுடா நாடுகளுக்கு பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது பலாப்பழம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பெரிய பலாப்பழம் தற்போது ரூ.150-க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் பலாப்பழங்களை கொண்டு மதிப்பு கூட்டுதல் முறையில் ஜாம், மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்டங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனால் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் டன் கணக்கில் பலாப்பழ ஏற்றுமதி செய்தும், உரிய விலை இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இப்பகுதியில் விளையும் பலாப்பழங்களுக்கு மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

தமிழகத்தில் ஆங்காங்கே பலாப்பழங்கள் விளைந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக விளைச்சல் காணப்படுகிறது. அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், நெடுவாசல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் அதிகளவில் காணப்படும். பசுமை நிறந்த மரங்களில் பலாப்பழங்கள் தொங்குவதை காணமுடியும். இங்கு விளையும் பலாப்பழங்கள் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. சீசன் காலத்தில் பலாப்பழம் விற்பனை அதிகமாக நடைபெறுகிற நிலையில், விலை இல்லாமல் சில நேரங்களில் வீணாகி கூட போவது உண்டு. போதுமான விலை இல்லாத காரணத்தினால் பறிக்காமல் கூட விவசாயிகள் விட்டுவிடுவார்கள்.

இந்த நிலையில் புதுக்கோட்டை பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற விவசாயிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஆவணங்களை தயார் செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விண்ணப்பிக்க உள்ளனர். இதற்கு தோட்டக்கலை துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் தான் இந்த புவிசார் குறியீடுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை பலாப்பழத்தின் அருமை கருதி புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை இல்லாத காலத்தில் சில நேரங்களில் பலாப்பழங்கள் வீணாக சாலையோரமும், மரத்தின் அடியிலும் கிடப்பதை காணமுடியும். இதனால் பலாப்பழங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது'' என்றனர்.


Next Story