பலாப்பழ சீசன் தொடங்கியது
வால்பாறையில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
வால்பாறை
வால்பாறையில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
பலாப்பழ சீசன்
மலைப்பிரதேசமான வால்பாறையில் பசுமையான வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு காலநிலைக்கு ஏற்ப ஆரஞ்சு, பலா, கொய்யா, பட்டபுரூட் போன்ற பழங்கள் காய்த்து வருகிறது. மே, ஜூன் மாதங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்குவது வழக்கம். அதேபோல் தற்போது வால்பாறையில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், காபி தோட்ட பகுதிகள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் பழுக்க தொடங்கி விட்டன. இந்த பலா பழங்களை பழ வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். பின்னர் அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
வனத்துறையினர் எச்சரிக்கை
ஒரு பலாப்பழம் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடை விடுமுறையையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலா பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வனப்பகுதியில் உள்ள பலா மரங்களிலும் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. வால்பாறை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்ற நிலையில், பலாப்பழ சீசன் காரணமாக கேரள வனப்பகுதிகளுக்கு செல்லாமல் தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக வனப் பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் மரங்களில் காய்த்து உள்ள பலா பழங்களை ருசிப்பதற்காக காட்டு யானைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.