கோத்தகிரி -மேட்டுப்பாளையம் சாலையில் விற்பனைக்கு குவிந்துள்ள பலாப்பழங்கள்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் சீசன் காரணமாக பலாமரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இந்தப் பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் சீசன் காரணமாக பலாமரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. இந்தப் பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
பலாப்பழ சீசன் தொடக்கம்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பரப்பில் விவசாயிகள் பலா மரங்களைப் பயிரிட்டு உள்ளனர். வழக்கமாக இந்த மரங்களில் கோடைகாலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது வழக்கம். இந்த சுவை மிகுந்த பலாபழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அரவேனு, கொட்டக்கம்பை, முள்ளூர், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பலாப்பழங்களை அடுக்கி வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.400 வரை அளவிற்கு தக்கவாறு விற்பனை செய்யப்படுகிறது. பலாச்சுளை ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
இந்தநிலையில் தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் சீசன் காரணமாக கொத்துக் கொத்தாக பலா பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. எனவே இந்த பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து இப்பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப் பகுதிகளில் முகாமிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன. ஒரு பலாப் பழத்தை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கி சரக்கு வாகனங்கள் மூலம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலைக்கு கொண்டு வந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பலாப்பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.