பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு தலைவராக ஜெகநாதன் நீடிப்பார்
நம்பிக்கை இல்லா தீர்மான விவகாரத்தில் அதிரடி திருப்பமாக பனமரத்துபட்டி ஒன்றியக்குழு தலைவராக ஜெகநாதன் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பனமரத்துப்பட்டி,
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதா? அல்லது தோல்வி அடைந்ததா? என்பது குறித்து கடந்த 10 மாத காலமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. மேலும் தலைவர் இல்லாமல் ஒன்றிய குழு கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்ற காரணத்தினால் கடந்த 10 மாத காலமாக பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு கூட்டமும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவருக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் செல்லுபடி ஆகாது என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுவில் மொத்தம் உள்ள 13 உறுப்பினர்களில் 5 -தில் 4 பங்கு உறுப்பினர்கள் ஒன்றிய குழு தலைவர் எதிராக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு கணக்கிடும் பொழுது 13 உறுப்பினர்களில் 10.4 என்ற பின்ன அடிப்படையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை வருவதால் அதனை 11 உறுப்பினர்கள் என கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் 11 ஒன்றிய குழு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். ஆனால் 10 உறுப்பினர்கள் மட்டுமே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். எனவே இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் செல்லுபடி ஆகாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவராக ஜெகநாதன் தொடர்ந்து செயல்படுவார் என சேலம் கலெக்டர் கார்மேகம் அறிவித்துள்ளார்.
---