ஜெய்பீம் பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்


ஜெய்பீம் பட வழக்கு -  நடிகர் சூர்யா,  இயக்குனர் ஞானவேலுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x

ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியின​ சமூகத்தாரை இழிவுபடுத்தியதாக கூறி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஜெய்பீம் படத்தில், குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தை தயாரித்து நடித்த சூர்யா, இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவை ரத்து செய்து, புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் முருகேசன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா மீதும், இயக்குனர் ஞானவேல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் இருவரையும் எதிர்மனுதாரர்களாக இணைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இருவரும் சேர்க்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து சென்னை காவல் துறை, நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஹேமலதா தள்ளி வைத்துள்ளார்.


Next Story