கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தனியார் பள்ளி ஊழியர் கொலை: கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-நாமக்கல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தனியார் பள்ளி ஊழியர் கொலை: கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-நாமக்கல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:05 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

கொல்லிமலையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தனியார் பள்ளி ஊழியரை அடித்துக்கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளத்தொடர்பு

நாமக்கல் மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபிநத்தத்தை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 47). இவர் கொல்லிமலை அரியூர் நாட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வந்தார். அதே பள்ளியில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த விளாரிபாளையத்தை சேர்ந்த தர்மராஜன் (40) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே தர்மராஜன் மனைவிக்கும், ரத்தினத்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ரத்தினம், தர்மராஜனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி இரவு பள்ளி வளாகத்தில் ரத்தினம் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மராஜன், கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக அவரிடம் கேட்டார்.

அடித்துக்கொலை

இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தர்மராஜன் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பெரிய கரண்டியால் ரத்தினத்தை அடித்துக்கொலை செய்தார். பின்னர் ரத்தினத்தின் உடலை குழிதோண்டி புதைத்தார்.

இதுதொடர்பாக வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரத்தினத்தை அடித்துக்கொலை செய்த தர்மராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ரத்தினத்தை கொலை செய்த குற்றத்திற்காக தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நந்தினி உத்தரவிட்டார்.

இதையடுத்து தர்மராஜனை சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் போலீசார் கோவைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பாராட்டினார்.


Next Story