பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு: 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை-நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
நாமக்கல்:
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தங்க சங்கிலி பறிப்பு
நாமக்கல்லில் சேலம் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல். இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூர் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் 2 பேர் கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் தங்க சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றனர். இது தொடர்பாக செல்வி கொடுத்த புகாரின் பேரில் நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த பிரவீன் பாண்டியன் (20), கோகுல்ஸ்ரீ (19) ஆகிய இருவரும் செல்வியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை
இது தொடர்பான வழக்கு நாமக்கல் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட பிரவீன் பாண்டியன், கோகுல்ஸ்ரீ ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.