பெண்ணை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள சாத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சொர்ணம்(55). சம்பவத்தன்று சொர்ணம் வீட்டு கோழி சுப்பிரமணி வீட்டு பக்கம் சென்றது. இதனால் சுப்பிரமணியினுடைய தாய் பஞ்சவர்ணத்திற்கும் சொர்ணத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியனும் அவரது தாய் பஞ்சவர்ணமும் சேர்ந்து சொர்ணத்தை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் சுப்பிரமணி மற்றும் அவரது தாயார் பஞ்சவர்ணம் ஆகிய இருவர் மீதும் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். ஏற்கனவே சுப்பிரமணியினுடைய தாயார் பஞ்சவர்ணம் இறந்து விட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில்வேலவன் ஆஜரானார்.