முன்னாள் எம்.பி. ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை
செக் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நேதாஜி சாலையில் வசிப்பவர் திருச்செல்வம் (வயது 50). இவர் பழைய தங்கம், வைர நகைகளை வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே. ரித்தீஷ் இவரது நண்பர். இந்த பழக்கத்தின் அடிப்படையில் ரித்திஷின் மனைவி ஜோதீஸ்வரி காரைக்குடி வந்து திருச்செல்வத்தை சந்தித்து தங்கம், வைர, நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வேண்டும் என ஆர்டர் கொடுத்தாராம். அதன் பேரில் திருச்செல்வம் அவருக்கு வாங்கி கொடுத்ததுள்ளார். அதற்காக ஜோதிஸ்வரி ரூ.20 லட்சம் வீதம் ரூ.60 லட்சத்திற்கு 3 காசோலைகளை கொடுத்தார். இச்சம்பவம் 2019-ல் நடைபெற்றது. குறிப்பிட்ட தேதியில் திருச்செல்வம் வசூலுக்காக காசோலைகளை வங்கியில் சமர்ப்பித்தார். ஆனால், பணம் இல்லாததால் காசோலைகளை வங்கி திருப்பி அனுப்பியது. இது குறித்து ஜோதீஸ்வரியிடம் திருச்செல்வம் கேட்டபோது ஜோதீஸ்வரி உரிய பதில் கூறவில்லை. இதனால் திருச்செல்வம் காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, குற்றம் சாட்டப்பட்ட ஜோதீஸ்வரிக்கு 6 மாதம் சிறை தண்டனையும், 1 மாத காலத்தில் பணத்தை திருப்பி செலுத்தாவிடில் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.