சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:வாலிபருக்கு 10 ஆண்டு சிறைசேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பாலியல் தொந்தரவு
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே இடங்கணசாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 23). இவர், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மணி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.