வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
ஆனைமலை
ஆனைமலை அருகே நரசிம்மநகர் வீதியைச் சேர்ந்தவர் ஆலி முத்து. இவருடைய மகன் திருட்டு மணி (வயது 23). அதே பகுதி யை சேர்ந்தவர் காட்டு ராஜா.
இவருடைய மகன் ஈஸ்வரன் (22). இவர்கள் 2 பேரும் தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களை ஆனைமலை போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தனர்.
இதனால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருட்டு மணி, ஈஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீதான வழிப்பறி வழக்கு விசாரணை பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் திருட்டு மணிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஈஸ்வரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.