பல கோடி ரூபாய் மதிப்புடைய மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி-கட்டுமான நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு சிறை தண்டனை

பல கோடி ரூபாய் மதிப்புடைய மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி-கட்டுமான நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு சிறை தண்டனை
x

மீனாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த கட்டுமான நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

மதுரை

மீனாட்சி அம்மன்கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த கட்டுமான நிறுவன நிர்வாகிகள் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

ரூ.2 கோடி கடன்

மதுரை விலாஸ் பில்டர்ஸ் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு ரூ.2 கோடி கடன் பெறப்பட்டது. இதற்கு அடமானமாக பல்வேறு சொத்து ஆவணங்கள் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அந்த கடன் தொகையை கட்டுமான நிறுவனம் உரியமுறையில் செலுத்தவில்லை.

மேலும் 64 வீடுகள் கட்டுவதற்காக என்று கூறி, வங்கியில் கடன் பெறப்பட்டது. ஆனால் விசாரணையில் 32 வீடுகள்தான் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடன் தொகைக்காக கட்டுமான நிறுவனத்தின் அடமான சொத்துகளை மீட்கும் நடவடிக்கையில் வங்கி ஈடுபட்டது.

மீனாட்சி கோவில் சொத்து மோசடி

அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான பொன்மேனி கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் 35 சென்ட் நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து தங்களின் சொத்துகளை போல வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி சார்பில் சி.பி.ஐ. போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இந்த மோசடி குறித்து கடந்த 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சி.பி.ஐ. சார்பில் வக்கீல் விஜயன்செல்வராஜ் ஆஜராகி, இந்த மோசடி குறித்த சாட்சியங்களை எடுத்துரைத்தார்.

3 பேருக்கு சிறை

விசாரணை முடிவில், மீனாட்சி அம்மன் கோவில் நிலம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் விலாஸ் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சண்முகராஜா, இயக்குனர்கள் தங்கம், நித்திய கல்யாணி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி பசும்பொன் சண்முகையா நேற்று தீர்ப்பளித்தார்.

Related Tags :
Next Story