இலங்கைக்கு வெடிமருந்து கடத்திய வழக்கில் 6 பேருக்கு சிறை தண்டனை
இலங்கைக்கு வெடிமருந்து கடத்திய வழக்கில் 6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததால் விடுதலை செய்யப்பட்டனர்.
வெடிமருந்து கடத்தல்
திருச்சியில் இருந்து இலங்கைக்கு விடுதலை புலிகளுக்காக துப்பாக்கி குண்டுகள் தயாரிப்பதற்காக வெடி மருந்துகள் கடத்தப்படுவதாக திருச்சி கியூ பிரிவு போலீசாருக்கு கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதி தகவல் வந்தது. இதையடுத்து, கியூ பிரிவு போலீசார் திருச்சி பொன்னகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 4½ டன் பல்வேறு ரக துப்பாக்கிகளுக்கு தோட்டாக்கள் தயாரிக்கப்படும் பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், 9 கிலோ கஞ்சா, செல்போன்கள், ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வீட்டில் இருந்த 21 பேர் தாங்கள் விடுதலை புலிகளுக்காக இந்தப் பொருட்களை படகு மூலமாக இலங்கைக்கு கடத்த இருந்ததை ஒப்புக்கொண்டனர்.
21 பேர் கைது
இதனைத்தொடர்ந்து 21 பேரும் கைது செய்யப்பட்டு கியூ பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தொடர்ந்து சாட்சிகளின் விசாரணை மற்றும் வாதங்கள் நிறைவு பெற்ற பிறகு நீதிபதி பாபுலால் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் கைது செய்யப்பட்ட 21 பேரில் 15 நபர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 6 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது.
விடுதலை
கடந்த 2007-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்காக இலங்கைக்கு 4½ டன் பால்ரஸ் குண்டு வெடிமருந்து, ரூ.10 லட்சம், 9 கிலோ கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கையை சேர்ந்த அருள்சீலனுக்கு ஓராண்டு தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சென்னையை சேர்ந்த சுகு என்ற சுகுமாறனுக்கு ஓராண்டு சிறையும் ரூ.1,000 அபராதமும், மற்றொரு சுகுமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், ஜெயராமன் என்பவருக்கு 5 மாத சிறைதண்டனையும், ரூ.1,500 அபராதமும், மதுரையை சேர்ந்த பாலமுருகனுக்கு ரூ.1,000 அபராதமும், பெரம்பலூரை சேர்ந்த ரமேஷ்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.900 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் ஏற்கனவே சிறையில் தண்டணை காலத்தை அனுபவித்து விட்டதால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அபராத தொகையை மட்டும் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.