ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சிறை தண்டனை
பெண்ணை அரிவாளால் தாக்கி சங்கிலி பறித்த வழக்கில் ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வள்ளியூர் (தெற்கு):
பணகுடி ஆசாத் மேலத் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். மேளக் கலைஞர். இவருடைய மனைவி தாமரைசெல்வி. இவர் கடந்த 21.12.2008 ஆண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு நெல்லை தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த கண்ணன் (எ) குண்டு கண்ணன் (வயது 48), இட்டமொழி கீழபண்டாரபுரம் குமாரவேல் (43), வள்ளியூர் மறவர் காலனி கண்ணன் (39) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். தாமரைச் செல்வியின் வீட்டிற்குள் குண்டு கண்ணன் அத்துமீறி நுழைந்தார். அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி அரிவாளால் தாக்கி அவர் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை குண்டு கண்ணன் பறித்தார். மற்ற இருவரும் வெளியில் நின்று கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த வழக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் வள்ளியூர் மறவர் காலனியை சேர்ந்த கண்னன் இறந்துவிட்டார். குமாரவேல் விடுதலை செய்யப்பட்டார். குண்டு கண்ணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும், கொடூரமாக ஆயுதத்தால் தாக்கி சங்கிலி பறித்ததில் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி பர்ஷத் பேகம் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு உதவி வழக்கறிஞர் ராமநாராயண பெருமாள் ஆஜரானார்.