திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 24 பேர் படுகாயம்


தினத்தந்தி 25 Feb 2023 2:00 AM IST (Updated: 25 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர். மாடுபிடி வீரர் ஒருவர் 17 காளைகளை அடக்கி அசத்தினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே நத்தமாடிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 24 பேர் படுகாயம் அடைந்தனர். மாடுபிடி வீரர் ஒருவர் 17 காளைகளை அடக்கி அசத்தினார்.

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நத்தமாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.

முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி மதுரை, விருதுநகர், தேனி, திருச்சி, அலங்காநல்லூர், பாலமேடு, திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 503 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் 115 மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை ஆன்லைன் வழியாக பதிவு செய்தனர்.

12 பேர் தகுதி நீக்கம்

இந்தநிலையில் நேற்று காலை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 12 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் 113 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 481 காளைகளும் அழைத்துவரப்பட்டிருந்தன.

பின்னர் ஜல்லிக்கட்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி கீதா, விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல், தி.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சலேத்மேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் மற்றும் ஊர் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை.

இதையடுத்து மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 20 பேர் வீதம் களம் இறக்கப்பட்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் போட்டிப்போட்டு அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின. சில காளைகள் கொம்புகளால் மட்டுமின்றி கால்களாலும் வீரர்களை உதைத்து தள்ளியது. சில காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறி ஓடாமல், கம்பீர நடைபோட்டு மாடுபிடி வீரர்களை அச்சுறுத்தியது. இதனால் மாடுபிடி வீரர்கள் நாலாபுறமாக சிதறி ஓடினார்கள். இருப்பினும் அந்த காளைகள் விடாமல் மாடுபிடி வீரர்களை முட்டி பந்தாடின. அப்போது காளைகளிடம் இருந்து தப்பிக்க வீரர்கள் இரும்பு தடுப்பு கம்பிகளில் ஏறி பாதுகாப்பாக நின்றனர்.

சிலர் காளைகளுக்கு பயந்து தரையோடு தரையாக படுத்துக்கொண்டனர். இருப்பினும் தரையில் படுத்தவர்களையும் காளைகள் கொம்புகளால் குத்த முயற்சித்தன. சில காளைகள் தன் திமிலை பிடித்தவர்களை அப்படியே முட்டி அந்தரத்தில் பறக்கவிட்டன. இதுபோன்று சிறப்பாக களத்தில் நின்று விளையாடிய காளைகளை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பார்வையாளர்கள் உற்சாகம்

ஒரு காளை மைதானத்தில் நின்று விளையாடிவிட்டு வெளியேறிய பின்னர், அதனை பிடிக்க மாட்டின் உரிமையாளர்கள் கயிற்றை வீசினர். இதில் கயிறு தவறுதலாக காளையின் வலது பின்னங்காலில் சிக்கிக்கொள்ள அந்த காளை நீண்ட நேரம் மைதானத்தை சுற்றி, சுற்றி வந்து ஒரு கட்டத்தில் படுத்துக்கொண்டது. பின்னர் மாட்டின் உரிமையாளர்கள், போலீசார் உதவியுடன் அதனை வெளியேற்றினர். சில காளைகள் மைதானத்தில் விளையாடிவிட்டு மீண்டும் வந்த வழியே வாடிவாசலில் புகுந்து வெளியேற முயற்சித்தன. அதனை தடுப்புகள் அமைத்து திருப்பி அனுப்பினர்.

காளைகளை அடக்க விடாமல் செய்ய பல காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்களுக்கு இடையில் கயிற்றோடு புகுந்தனர். அவர்களை போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் கயிற்றோடு புகுந்த மாட்டின் உரிமையாளர்களுக்கும், காளைகளின் வாலை பிடித்த வீரர்களுக்கும், ஒரு காளையை ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கிய நபர்களுக்கும் பரிசுகள் மறுக்கப்பட்டது. உரிமையாளர்கள் பலர் தங்களது காளைகளின் சிறப்பான விளையாட்டை செல்போன், கேமரா மூலம் வீடியோ எடுத்தனர். போட்டியை கண்டுகளித்த பொதுமக்கள் ஆரம்பம் முதல் முடிவடையும் வரை விசில் அடித்தும், கரவொலி எழுப்பியும் ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

17 காளைகளை அடக்கிய வீரர்

ஜல்லிக்கட்டில் 7 வயது சிறுவன் ஒரு காளையை அவிழ்த்துவிட்டான். அந்த காளை துள்ளிக்குதித்து யாரிடமும் சிக்காமல் வெற்றிபெற்றது. துணிச்சலுடன் காளையை அழைத்து வந்த சிறுவனை அனைவரும் பாராட்டினர். இந்த ஜல்லிக்கட்டில் புல்லட், கருப்பு தங்கம் என பல்வேறு பெயர்களில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் சாணார்பட்டியை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது 25) என்பவர் 17 காளைகளை அடக்கி அசத்தினார். அவருக்கு சிறப்பு பரிசாக சோபாசெட் வழங்கப்பட்டது. மேலும் காளையை அடக்கிய ஒரு வீரருக்கு கன்றுக்குட்டி பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் காளைகளை அடக்கிய மற்ற வீரர்களுக்கும், நின்று விளையாடி சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்ளுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் டி.வி., பீரோ, கட்டில், வெள்ளிக்காசு, குக்கர், கிரைண்டர், மின்விசிறி, அண்டா, பாத்திரங்கள், நாற்காலிகள், ஹெல்மெட் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

24 பேர் படுகாயம்

மேலும் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என 24 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பழனியை சேர்ந்த மணிவண்ணன் (32), மஞ்சநாயக்கன்பட்டி கருப்புசாமி (21), கொசவப்பட்டி இருதயராஜ் (54), கைலாசம்பட்டி ராஜ் (50) ஆகிய 4 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் 250 போலீசார் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு படைவீரர்களும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனத்துடன் இருந்தனர். இந்த ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை நத்தமாடிப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைந்தது.


Related Tags :
Next Story