குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்-மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்


குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்-மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பறைசாற்றும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடந்த ஜல்லிக்கட்டை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் மதிவேந்தன் தலைமையில், மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

முதலில் வாடி வாசல் வழியாக கோவில் காளை அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினரால் சான்றளிக்கப்பட்ட காளைகள், ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் நாமக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் வீதம், 8 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷத்துடன் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, அவற்றின் திமிலை பிடித்து ஆர்வமுடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள், காளையர்களுக்கு போக்கு காட்டின. மேலும் காளைகள் கொம்பால் காளையர்களை தூக்கி வீசி பந்தாடின.

இதில் 22 காளையர்கள் காயம் அடைந்தனர். மேலும், ஜல்லிக்கட்டை காண வந்திருந்த சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான். அவனுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசுகள்

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குக்கர், டி.வி., தங்க நாணயங்கள், ரொக்கப்பணம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலை 4.15 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதனை குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


Next Story