ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்கிய காளையர்கள்
இளையான்குடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினார்கள்.
இளையான்குடி
இளையான்குடி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினார்கள்.
ஜல்லிக்கட்டு
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் ஊராட்சி அய்யம்பட்டி கிராமத்தில் கழுங்கு முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர்.
பரிசு
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விழா குழுவினர் சார்பாக பரிசு பொருட்களும், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 10-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் சாலைக் கிராமம், சமுத்திரம், முத்தூர், கட்டனூர், கரும்புக்கூட்டம் சாத்தனூர், வடக்கு கீரனூர், வண்டல், விரையாதகண்டன் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கண்டுகளித்தனர்.
விழாகுழுவினர் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை அய்யம்பட்டி கிராம மக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.