கோவில் விழாவில் ஜல்லிக்கட்டு
கோவில் விழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 50 பேர் காயம் அடைந்தனர்.
மானாமதுரை
கோவில் விழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 50 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழாவையொட்டியும் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்த 750 காளைகள் களமிறங்கின. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.. போட்டிகளை தாசில்தார் ராஜா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
50 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் பல காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்குக்காட்டி சீறிப்பாய்ந்து சென்று பரிசுகளை வென்றன. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன.
வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்ளுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, டேபிள், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக இந்த ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. காளைகளை பிடிக்க முயன்ற வீரர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விழா ஏற்பாடுகளை கட்டிகுளம் கிராம மக்கள் செய்திருந்தனர். மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.