அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி வாலிபர் பலி
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டியன் மகன் அஜித் பாண்டியன் (வயது 25). என்ஜினீயர். சம்பவத்தன்று அஜித்பாண்டியன் மாட்டு கொட்டகையில் கட்டியிருந்த ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டுவதற்கு முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தக் காளை, அஜித் பாண்டியனை வலது தொடை பகுதியில் பலமாக முட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கினார்.
விசாரணை
ஆபத்தான நிலையில் அஜித்பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அஜித் பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.