2 மணி நேரத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு


2 மணி நேரத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு
x

வேப்பந்தட்டை அருகே 2 மணி நேரத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பெரம்பலூர்

ஜல்லிக்கட்டு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அனுமதி கடிதம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு மாதத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் திடீரென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பால் விழாக் குழுவினர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். வெளியூர்களிலிருந்து ஜல்லிக்கட்டு காளைகள் நேற்று முன்தினமே வந்தது. இந்த காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். அதன் பின்னர் இரவு 11 மணி அளவில் விழா குழுவினருக்கு நேற்று மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வந்துள்ளது.

கடைசி நேரத்தில் அனுமதி

அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்தில் ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனால் நேற்று மதியம் 1 மணி வரை வாடிவாசலில் வீரர்கள் இல்லாமலும், பார்வையாளர்கள் மாடத்தில் ரசிகர்கள் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரசேகர் விழா மேடைக்கு மதியம் 1:30 மணி அளவில் வந்தார். அதன் பிறகு பொதுமக்களிடம் ஓரளவுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கை வந்தது. ஆனாலும் சென்னையில் இருந்து உரிய அனுமதி இன்னும் வரவில்லை எனவும், அனுமதி வந்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் எனவும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

அதன் பிறகு நேரம் செல்ல செல்ல திக்... திக்... என விழா குழுவினர், வீரர்கள், பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது. அதன் பிறகு மாலை 3 மணி அளவில் அனுமதி பெறப்பட்டது என கூறி ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

பரிசுகள்

வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை பிடித்தார்கள். பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த பொதுமக்கள் கைத்தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். மாலை 3 மணி அளவில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு 5 மணி அளவில் முடிவுக்கு வந்தது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 235 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. 120 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். இதில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், சில்வர் பாத்திரம், கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர்.


Next Story