சேந்தமங்கலத்தில் கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு:காளைகளை தீரத்துடன் அடக்கிய வீரர்கள்மாடுகள் முட்டியதில் 4 பேர் காயம்


தினத்தந்தி 3 March 2023 7:00 PM GMT (Updated: 3 March 2023 7:00 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை தீரத்துடன் வீரர்கள் அடக்கினர். மாடுகள் முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. நேற்று சேந்தமங்கலம் மாப்பிள்ளையான் தோட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மருத்துவ பரிசோதனை

போட்டியில் திண்டுக்கல், நெல்லை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

காலை 9 மணிக்கு காளைகளுடன், உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் கால்நடை டாக்டர்கள் சோதனை செய்த பின்னர் காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

போக்கு காட்டிய காளை

காலை 9.30 மணிக்கு முதலாவதாக நைனாமலை கோவில் மாடு வாடிவாசல் வழியாக விடப்பட்டது. சேந்தமங்கலத்தை சேர்ந்த காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த மாடு வீரர்களிடம் பிடிபட்டது. ஆனால் மாடு மைதானத்தில் இருந்து வெளியேறாமல் போக்கு காட்டியது. சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மைதானத்திலேயே காளை நின்றதால் போட்டியை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து உரிமையாளரின் உதவியுடன் காளையை நடமாடும் கால்நடை பராமரிப்பு துறையின் ஆம்புலன்சில் அதிகாரிகள் ஏற்றி சென்றனர்.

தீரத்தை காட்டிய வீரர்கள்

தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மைதானத்தில் நின்ற வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் ஓடின.

சில காளைகள் வீரர்களிடம் போக்கு காட்டியது. அதனை லாவகமாக வீரர்கள் அடக்கியது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. மாலை 5 மணி அளவில் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. மாடுகள் முட்டியதில் 4 வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பரிசுகள்

முன்னதாக காலையில் காளையை அடக்கிய வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்ககாசு பரிசாக வழங்கினார். தொடர்ந்து போட்டியில் 10 காளைகளை அடக்கிய எருமப்பட்டியை சேர்ந்த கார்த்திக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. அவர் சிறந்த மாடுபிடி வீரராகவும் அறிவிக்கப்பட்டார்.

தொடர்ந்து எருமப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு ஒரு பவுன் தங்க காசும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தயாநிதிக்கு பேட்டரி ஸ்கூட்டர் பரிசுகளாக வழங்கப்பட்டன. மேலும் இதர வீரர்களுக்கு வெள்ளி காசுகள், குத்துவிளக்கு, ட்ரெசிங் டேபிள், ஷோபா, டைனிங் டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

போலீசார் பாதுகாப்பு

இதில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பேரூர் செயலாளர் தனபால் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க சேந்தமங்கலம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story