ஜமேஷா முபின் கூட்டாளிகள் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டினார்களா?
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் கைதான ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 3 பேரும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்க சதித் திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் கைதான ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 3 பேரும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்க சதித் திட்டம் தீட்டினார்களா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் வெடிப்பு சம்பவம்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்தது. இதில் அந்த காருக்குள் இருந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 6 பேரை கோவை போலீசார் உபா சட்டத்தின் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம்) கீழ் கைது செய்தனர்.
மேலும் 3 பேர் கைது
இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 6 பேரையும் சென்னை அழைத்துச்சென்று என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தினார்கள்.
அதில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபீக் (28), பெரோஸ்கான் (28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த உமர் பாரூக் (39) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
வெடிகுண்டு தொடர்பான தகவல்
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு ஜமேஷா முபினை தற்போது கைதான 3 பேரும் அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும் ஜமேஷா முபின், முகமது தவுபீக்கிற்கு ஒரு புத்தகம் கொடுத்து உள்ளார். அந்த புத்தகத்தில் வெடிகுண்டு எவ்வாறு செய்ய வேண்டும், அதை வெடிக்க வைப்பது எப்படி? என்பதை கைப்பட எழுதி கொடுத்து இருக்கிறார்.
அத்துடன் ஜமேஷா முபின், பெரோஸ்கான், உமர்பாரூக் ஆகியோர் பலமுறை குன்னூரில் உமர்பாரூக் வீட்டில் வைத்து ரகசிய கூட்டமும் நடத்தி உள்ளனர். அதில் சிறப்பு செயலி (ஐ.எம்.ஓ) மூலம் வெளிநாட்டில் உள்ள சிலரிடம் பேசியதும் தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் யாரிடம் பேசினார்கள்? என்ன பேசினார்கள்? என்பது தெரியவில்லை.
குறுஞ்செய்திகள் அழிப்பு
மேலும் ஜமேஷா முபின், உமர் பாரூக் ஆகியோர் அடிக்கடி வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் வீடியோ காலில் பேசி உள்ளனர். அத்துடன் அவர்கள் அந்த செயலி மூலம் குறுஞ்செய்தியும் அனுப்பி உள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்ததும், ஜமேஷா முபின் தனக்கு அனுப்பிய அனைத்து குறுஞ்செய்திகளையும் முகமது பாரூக் அழித்துள்ளார்.
எனவே ஜமேஷா முபின் அனுப்பிய தகவல்களை உமர் பாரூக் அழிக்க காரணம் என்ன? அதில் அவர்கள் எது தொடர்பாக உரையாடினார்கள்? குறிப்பாக வாட்ஸ்-அப் மூலம் பல தகவல்களை ஜமேஷா முபின் பரிமாற்றம் செய்து உள்ளார். எனவே அதில் அவர் பரிமாற்றம் செய்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குண்டு வைக்க சதியா?
மேலும் கோவை சம்பவம் நடப்பதற்கு முன்பு தற்போது கைதான 3 பேர் மற்றும் ஜமேஷா முபின் ஆகிய 4 பேரும் சேர்ந்து பலமுறை கோவையில் சந்தித்து பேசி உள்ளனர். எனவே அவர்கள் கோவையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டினார்களா? இந்த ரகசிய கூட்டத்தில் இந்த 4 பேரும்தான் பங்கேற்றார்களா அல்லது வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து யாராவது வந்து கலந்து கொண்டார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே தற்போது கைதான முகமது தவுபீக்கிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. எனவே இந்த 3 பேரிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்?, அவர்களுக்குள் நடந்த பரிமாற்றம் என்ன? எந்த பகுதியில் சந்தித்து பேசினார்கள்? என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
100 பேர் கண்காணிப்பு
அதுபோன்று இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தாலும், கோவை மாநகர போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தடை செய்யப்பட்ட, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள், தீவிர மதவாத ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்கள் என 100 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.