போலி பெயர்களில் வெடி பொருட்களை வாங்கிய ஜமேஷா முபின்


போலி பெயர்களில் வெடி பொருட்களை வாங்கிய ஜமேஷா முபின்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்கள், சிம்கார்டுகளை பயன்படுத்தி போலி பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ.விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கோயம்புத்தூர்


கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்கள், சிம்கார்டுகளை பயன்படுத்தி போலி பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ.விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இது பற்றியவிவரம் வருமாறு:-

கார் வெடிப்பு

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (வயது 29) இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவருடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர். மேலும் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அதி பயங்கர வெடிபொருட்களான பி.இ.டி.என்., நைட்ரோ கிளிசரின் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட், ரெட் பாஸ்பரஸ் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஜமேஷா முபின் கோவையில் தாக்குதல் நடத்த முடிவு செய்ததும், இதற்கு தேவையான வெடி பொருட்களை,பல்வேறு செல்போன்கள், சிம்கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் ஒரே முகவரியை பயன்படுத்தாமல் வெவ்வேறு முகவரிகளை அளித்து அந்த வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை போலி பெயர்களில் அவர் வாங்கியுள்ளார். இந்த பொருட்களை பல்வேறு நாட்களில் சிறுக, சிறுக வாங்கி சேமித்து உள்ளார்.

இதனிடையே பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்களை வைப்பதற்கு இரும்பு டிரம்கள் ஜமேஷா முபினுக்கு தேவைப்பட்டது. இதையடுத்தது உக்கடம் லாரி பேட்டைக்கு சென்று 3 இரும்பு டிரம்களை வாங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த கடை ஊழியர்கள் அவரிடம், பெயர் உள்ளிட்ட விபரங்களை கேட்டபோது, ஜமேஷா முபின் தனது உண்மையான பெயரை மறைத்து அப்துல் ரகுமான் என்று பெயரை மாற்றி கூறியுள்ளார்.

செல்போன் எண் விபரம் சேகரிப்பு

இதேபோல் ஆன்லைன் மூலம் வாங்கிய பொருட்கள் குறித்த விபரங்களை தனது செல்போனில் இருந்து உடனுக்குடன் அழித்து உள்ளார். மேலும் சந்தேகம் வராமல் இருக்க வெவ்வேறு சிம் கார்டுகளையும் பயன்டுத்தி உள்ளார். போலீசார் ஜமேஷா முபின் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ஏராளமான சிம் கார்டுகளை பறிமுதல் செய்து உள்ளனர். இதில் உள்ள ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே கோட்டைமேடு பகுதியில் உள்ள அனைத்து செல்போன் கோபுரங்களிலும் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற முன் பதிவான அனைத்து செல்போன் எண்களின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளன. இந்த செல்போன் எண்களின் உரிமையாளர்கள் விபரம், அவர்களின் பின்னணி ஆகியவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சி.சி.டி.வி. மற்றும் ஜமேஷா முபின் வீடு அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பணப்பரிமாற்ற விபரம் சேகரிப்பு

இந்த நிலையில் ஜமேஷா முபின் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரின் வங்கி கணக்குகளுக்கு யார், யார் பணம் அனுப்பி உள்ளனர். எந்த வங்கி கிளையில் இருந்து அவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக பணப்பரிமாற்றம் நிகழ்ந்து உள்ளது. இதற்கான ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் அதனை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இதனிடையே ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட ரியாஸ் தனது தாயாருடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் அவரின் தாயார் நீ எங்கு இருக்கிறாய்? வண்டி எங்கே என்று கேட்கிறார்? அதற்கு ரியாஸ் தான் முபின் தனது வீட்டை காலி செய்வதால் அங்கு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்கிறேன். வண்டியை மச்சானிடம் கொடுத்து விட்டதாக கூறுகிறார். அதனை தொடர்ந்து அவரது தாயார், நீ எப்போது வருவாய் என கேட்க, அதற்கு அவர் சீக்கிரம் வந்து விடுவதாக தெரிவித்து உள்ளார்.

இதேபோல் பெரோஸ் தனது நண்பர் ரியாசை தொடர்பு கொண்டு பேசும்போது, நீ முபின் வீட்டிற்கு வா பொருட்களை மாற்ற வேண்டும் என்ற கூறுகிறார். இந்த ஆடியோக்கள் பதிவு செய்யப்பட்டு தற்போது சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது. ஒருவேளை கார் வெடிப்பு தொடர்பாக தாங்கள் மாட்டிக்கொண்டால் முபின் வீட்டை காலி செய்வதற்காக உதவ வந்தோம் என்று கூறி தப்பித்து கொள்ளவே இவ்வாறு செல்போனில் பேசி அதனை ரெக்கார்டு செய்து வைத்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

கள்ளகுறிச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து உளவுத்துறை கண்காணிக்க வேண்டிய 96 பேர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஜமேஷா முபின் பெயர் கடைசியாக இடம் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் கோவையில் கண்காணிக்க வேண்டிய 150 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதிலும் ஜமேஷா முபின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து ஜாதி, மதம் ரீதியிலான கலவரங்களை சிலர் ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கை மட்டுமே மத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்தது. அதன் பேரில் கோவையில் கண்காணிக்கப்பட வேண்டிய நபர்களின் பட்டியல் சிறப்பு புலனாய்வு பிரிவுகள் மூலம் தயார் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்ற 150 பேரில் ஜமேஷா முபினும் ஒருவர். மற்றபடி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் இருந்து எவ்வித முன்னெச்சரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றனர்.


Next Story