2 ஆண்டுகளாக ஜமேஷா முபின் திட்டமிட்டாரா?
கோவையில் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டாரா என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டாரா என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் வெடிப்பு
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் இறந்தார். இந்த சம்பவத்தில் உண்மையை கண்டறிய அந்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் பெரிய அளவில் போலீசாருக்கு உதவியாக அமைந்தது. அந்த கேமராவில் 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஜமேஷா முபின் காரில் வரும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது.
ஜமேஷா முபின் கோவில் அருகே காரை நிறுத்தி 1½ நிமிடங்கள் வரை காரில் இருந்து உள்ளார். அதன்பின்னரே அந்த கார் பெரும் சத்தத்துடன் வெடித்து உள்ளது. வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக கண்காணிப்பு கேமராவில் 4 மணி 2 நிமிடத்தில் இருந்து 4 மணி 5 நிமிடம் வரை 3 நிமிடங்களுக்கு எதுவும் பதிவாகவில்லை. 3 நிமிடம் கழித்த பின்னரே மீண்டும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகி உள்ளன. இதேபோல் கார் வெடித்த அதிர்வு காரணமாக கோவில் கதவு பூட்டுகள் சேதமடைந்து, கதவு தானாக திறந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு கார் வெடிப்பின் அதிர்வலைகள் இருந்துள்ளன.
ஐ.எஸ். இயக்கத்தின் மீது ஆர்வம்
கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினுக்கு ஐ.எஸ். இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதன்காரணமாக அவர் தனது வீட்டில் ஐ.எஸ். கொடியில் உள்ள சின்னங்களை வரைந்து வைத்து உள்ளார். மேலும் கேரள சிறையில் உள்ள அசாருதீனுடன் இவருக்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.எஸ். இயக்க ஆதரவில் தீவிரமாக இருந்து உள்ளனர்.
இதன்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனது கூட்டாளிகளுடன் இணைந்து கோவையில் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரள சிறையில் உள்ள அசாருதீனை கடந்த 2019-ம் ஆண்டு முதல் யார்-யார் சந்தித்தினர், அவர்களின் விவரம், ஜமேஷா முபின் கேரளாவிற்கு எங்கெல்லாம் சென்றார், யாரை சந்தித்தார் உள்ளிட்ட விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.