ஜமேஷா முபினின் உறவினர் உபா சட்டத்தில் கைது
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் உறவினர், உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியது அம்பலமாகி உள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபினின் உறவினர், உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியது அம்பலமாகி உள்ளது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கார் வெடிப்பு
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது28) என்பவர் உடல் கருகி பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, உடனடியாக கோவைக்கு விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
75 கிலோ வெடிபொருள் பறிமுதல்
இதையடுத்து சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் இருந்த டைரியை கைப்பற்றினர். அதில் கோவை மாநகராட்சி விக்டோரியாஹால், கலெக்டர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், போலீஸ் கமிஷனர் அலுவலகம், ரெயில்நிலையம் ஆகிய 5 இடங்களின் பெயர்கள் சங்கேத மொழியில் குறிப்பிடப்பட்டு இருந்தன.
ஜமேஷா முபின் ஒருவராக மட்டும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்க முடியாது என்று கருதிய தனிப்படையினர், விசாரணையை பல்வேறு கோணங்களில் தீவிரப்படுத்தினர்.
5 பேர் கைது
இதன் பயனாக ஜமேஷா முபினுக்கு கார் கொடுத்த முகமது தல்கா, உதவி செய்த முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது அசாருதீன் ஆகிய 5 பேர் உபா சட்டத்தில் (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) கைது செய்யப்பட்டனர்.
கைதான 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் காவலில் எடுத்து கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் ஒருவர் உபாவில் கைது
மேலும் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திவந்தபோது, கோவை கோட்டைமேடு, வின்சென்ட் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வசித்துவரும் தனது பெரியப்பா மகன் அப்சர் கான் (வயது28) வீட்டுக்கு ஜமேஷா முபின் அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்சர் கான் வீட்டில் தனிப்படையினர் நேற்று சோதனை நடத்தி மடிக்கணினி, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கார் வெடிப்பு சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்சர்கானை தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். கோவை சம்பவத்தில் ஏற்கனவே 5 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் 6-வது நபராக அப்சர்கான் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள்
இவரும், ஜமேஷா முபினும் சேர்ந்து ஆன்லைன் ஷாப்பிங் இணைய தளங்கள் மூலம் முன்பதிவு செய்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சல்பர், சாக் பவுடர் ஆகியவற்றை ஒருகிலோ, 2 கிலோ என்று சிறு சிறு அளவில் வேறுவேறு பெயர்களில் வாங்கியுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு வாங்கிய வெடிபொருட்களை ஜமேஷா முபின் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்று யூடியூப் மூலம் பார்த்து அதற்கான செயல்க ளில் ஜமேஷாமுபின் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பட்டியல் சேகரிப்பு
எனவே கடந்த 2 ஆண்டுகளில் இணையதள ஷாப்பிங் நிறுவனங் கள் மூலம் வெடிபொருட்கள் வாங்கியவர்கள் யார்? என்று பட்டி யலை அளிக்குமாறு போலீசார் பிரபல ஷாப்பிங் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கைதான அப்சர்கான் எலெக்டிரீசியனாக வேலை செய்து வந்து உள்ளார். கைதான அப்சர்கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.