அண்ணாமலை தலைமையில் பா.ஜனதா பாதயாத்திரை: ராமேசுவரத்தில் அமித்ஷா தொடங்கிவைத்தார்


அண்ணாமலை தலைமையில் பா.ஜனதா பாதயாத்திரை: ராமேசுவரத்தில் அமித்ஷா தொடங்கிவைத்தார்
x

அண்ணாமலை தலைமையில் நடை பெறும் பா.ஜனதா பாதயாத்திரையை ராமேசுவரத்தில் அமித்ஷா நேற்று தொடங்கிவைத்தார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 168 நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது.

ராமேசுவரம்,

`என் மண், என்மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்' என்ற கோஷத்துடன் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடக்க விழா

தமிழகத்தில் 5 பகுதிகளாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 1700 கி.மீ. தூரம் நடந்து செல்லும் வகையிலும், 900 கி.மீ. தூரம் வாகனம் மூலம் செல்லும் வகையிலும் திட்டமிட்டுள்ளனர். மொத்தம் 168 நாட்கள் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பயணம் நடைபெறும் என்றும், முக்கிய நகரங்களுக்கு செல்லும்போது பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் வகையிலும், அதில் மத்திய மந்திரிகள், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நடைபயண தொடக்க விழா நேற்று மாலையில் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள திடலில் நடந்தது. இதற்காக அங்கு நாடாளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து குவிந்தனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விழாவில் கலந்துகொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் நேற்று மதியம் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மண்டபம் வந்து அங்கிருந்து காரில் விழா மேடைக்கு வந்தார்.

தலைவர்கள்

மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் வரவேற்று அமித்ஷாவை மேடைக்கு அழைத்து வந்தனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ், ஏ.சி.சண்முகம், அர்ஜுன் சம்பத், திருமாறன், செல்லமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் மோடி அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.

அமித்ஷா பேச்சு

விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா பேசும்போது, பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியையும், தி.மு.க.வையும் கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் பேசியதாவது:-

கடந்த 9 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் மத்திய அரசின் திட்டங்கள் சென்று அடைந்து இருக்கிறது. எனவே மக்கள் அடுத்த தேர்தலிலும் மகத்தான ஆதரவை பா.ஜனதாவுக்கு தருவார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மட்டும் பல ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. ஊழல் செய்த செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரலாமா? குடும்ப கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளன. அந்த கூட்டணியால் நாட்டுக்கு எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் வீட்டுக்குத்தான் நன்மை உள்ளது.

அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த நடைபயணம் மகத்தான வெற்றியை பெறும். தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கொடி அசைத்து தொடங்கிவைப்பு

இந்த விழாவுக்கு பின்னர் அண்ணாமலையின்பாதயாத்திரையை கொடி அசைத்து அமித்ஷா தொடங்கிவைத்தார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ ராமேசுவரம் பஸ் நிலையம் பகுதியில் இருந்து கோவிலை நோக்கி பாதயாத்திரை புறப்பட்டது. அண்ணாமலை மக்களை சந்தித்து பேசினார். மத்திய பா.ஜனதா ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை மக்களிடம் வழங்கினார். தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

கோவிலில் இன்று தரிசனம்

நேற்று இரவு ராமேசுவரத்தில் ஒரு ஓட்டலில் அமித்ஷா, அண்ணாமலை தங்கினர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு சென்று அமித்ஷா தரிசனம் செய்கிறார். காலை 10.30 மணிக்கு ஏரகாடு கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு அமித்ஷா செல்கிறார். மீண்டும் ஓட்டலுக்கு திரும்பும் அவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்து எழுதப்பட்ட, "கலாம் நினைவுகள் இறப்பதில்லை" என்ற புத்தகத்தை வெளியிடுகிறார். மதியம் 12 மணி அளவில் அப்துல் கலாம் வீட்டுக்கு சென்று கலாமின் குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். 12.45 மணிக்கு பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்தை பார்வையிடுகிறார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் வந்து, தனி விமானத்தில் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

இதே போல் இன்று தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, மதியத்துக்கு பின்பு ராமநாதபுரம் செல்கிறார். மாலையில் ராமநாதபுரம் நகரில் நடைபயணம் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். இன்று இரவு அங்கேயே தங்குகிறார். நாளை காலை முதுகுளத்தூர் தொகுதியிலும், பிற்பகலில் பரமக்குடி தொகுதியிலும் நடைபயணம் செய்கிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

அமித்ஷா வருகையையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும், மதுரை விமான நிலையம் பகுதியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


Next Story