மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா நிர்வாகி பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா நிர்வாகி பலி
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் பா.ஜனதா நிர்வாகி பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

பா.ஜனதா நிர்வாகி

விராலிமலை ஒன்றியம், தொண்டைமான்நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வீரம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சக்திவேல் (வயது 41). இவர் பா.ஜனதா கட்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இந்தநிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீரம்பட்டியில் இருந்து திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கீரனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு தங்கும் அறைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிவகாசியை சேர்ந்த சந்திரசேகர் (27) என்பவர் மீது சக்திவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சக்திவேல் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர், விபத்தில் படுகாயம் அடைந்த சந்திரசேகரை அப்பகுதி மக்கள் உதவியுடன் சக்திவேல் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சந்திரசேகருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சக்திவேல் தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் கீழே விழுந்ததால் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கீரனூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story