தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்


தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:30 AM IST (Updated: 22 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தேனி

அடுக்குமாடி குடியிருப்பு

தேனி அல்லிநகரத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 2019-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த குடியிருப்பு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. குடியிருப்பில் பக்கத்து தெருக்களில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது. மின்சார மீட்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிறுவர்கள் தொடும் தூரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் குறைபாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியோடு இந்த குடியிருப்பு உள்ளது. இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் படங்களுடன் செய்தி வெளியாகி இருந்தது.

இந்த செய்தியை பார்த்த மாவட்ட கலெக்டர் முரளிதரன், நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடியிருப்பில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு

இதுகுறித்து கலெக்டர் முரளிதரன் கூறுகையில், "குடியிருப்பில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், தூய்மை பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்கள் தாழ்வாக இருப்பது ஆபத்தானது. எனவே, உடனடியாக அவற்றுக்கு மூடிகள் அமைக்க வேண்டும் என்றும், நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு அம்சங்களை செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு வந்துள்ளது. அதன்பேரிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

'தினத்தந்தி' செய்தியுடன் மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஜெய்பீம் புரட்சிப் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் அருந்தமிழரசு தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் தேனி அல்லிநகரத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு குறித்து 'தினத்தந்தி'யில் வெளியான செய்தியுடன் கலெக்டர் முரளிதரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தேனி அல்லிநகரத்தில் துய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு மொத்தம் 84 குடியிருப்புகள் உள்ளன. தரமற்ற முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால், அடித்தள சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டுமான பணியில் ஊழல் நடந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்த விழுந்து ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, இதுதொடர்பாக முன்னாள் நகராட்சி ஆணையாளர்கள், பொறியாளர்கள், முன்னாள் நகராட்சி தலைவர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story