தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை மேலும் உயர்வு: மல்லிகைப்பூ கிலோ ரூ.2,700-க்கு விற்பனை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று மேலும் உயர்ந்தது. மல்லிகைப்பூ கிேலா ரூ.2,700-க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று மேலும் உயர்ந்தது. மல்லிகைப்பூ கிேலா ரூ.2,700-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
அவற்றை வாங்கி செல்ல அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகாலையிலேயே வியாபாரிகள் வருவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் மற்றும் பண்டிகை காலங்களிலும் பூக்களின் விலையில் மாற்றம் ஏற்படும்.
மல்லிகைப்பூ கிலோ ரூ.2,700
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டில் நேற்று முன்தினமே பூக்களின் விலை உயர்ந்தது. அது மேலும் நேற்று அதிகரித்தது.
அதாவது நேற்று முன்தினம் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.700 உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,700-க்கு விற்பனையானது. இதுபோல் கிலோ ரூ.1,500-க்கு விற்பனையான பிச்சி ரூ.2,000-க்கும், கிலோ ரூ.1,400-க்கு விற்பனையான முல்லை ரூ.1,800-க்கும் விற்பனையானது.
விலை விவரம்
தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பிற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-
அரளி ரூ.240, சம்பங்கி ரூ.50, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.30, தாமரை ஒரு எண்ணம் ரூ.10, கோழிப்பூ ரூ.50, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.180, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.300, மஞ்சள் கிரேந்தி ரூ.60, சிவப்புக்கிரேந்தி ரூ.65, சிவந்தி மஞ்சள் ரூ.100, சிவந்தி வெள்ளை ரூ.200, கொழுந்து ரூ.200, மருக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது.