ஜெயலலிதா சிலை, கூண்டு பறிமுதல்
ஜெயலலிதா சிலை, கூண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வடக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஜெயலலிதா சிலை மற்றும் கூண்டு வைப்பதற்காக கட்சி நிர்வாகிகள் சரக்கு வேனில் கொண்டு வந்தனர். கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வந்தார். கட்சியினர் ஊர்வலமாக வரும் போது பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வந்தனர். அப்போது எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா சிலையை வைக்க கட்சியினர் முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனுமதியின்றி சிலை வைக்க கூடாது என கூறி, ஜெயலலிதா சிலை மற்றும் கூண்டை பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பறிமுதல் செய்த சிலை மற்றும் கூண்டினை கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளதாகவும், தவறுதலாக எம்.ஜி.ஆர். சிலை அருகே கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறி அதனை கட்சி நிர்வாகிகள் பெற்று சென்றனர்.