'ஜே.இ.இ.' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்: 'கியூட்' தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு


ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்: கியூட் தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு
x

கோப்புப்படம்

'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் 2 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வின், முதல்கட்ட தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை 8 லட்சத்து 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் நாடு முழுவதும் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2-ம் கட்ட தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக இருப்பதாகவும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் குறித்த அறிவிப்பை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அதனை வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 21-தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story