மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி வாலிபர் பலி
கூடலூர்
கூடலூர் அருகே அள்ளுர்வயல் பகுதியை சேர்ந்தவர் சசி. இவரது மகன் இஸ்ரவேல்(வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்ரவேல் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் சுரேஷ்குமார் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கூடலூர் சென்றார். பின்னர் அவர்கள் இரவு 9 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை இஸ்ரவேல் ஓட்டினார். மாக்கமூலா பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது தொரப்பள்ளியில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இஸ்ரவேல், சுரேஷ்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே இஸ்ரவேல் பரிதாபமாக பலியானார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் சுரேஷ்குமார், கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் வரைந்து வந்து இஸ்ரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.