மூதாட்டியிடம் நூதன முறையில் நகை அபேஸ்


மூதாட்டியிடம் நூதன முறையில் நகை அபேஸ்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் ஓய்வூதிய திட்டத்துக்கு விண்ணப்பிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

போத்தனூர்

பிரதமரின் ஓய்வூதிய திட்டத்துக்கு விண்ணப்பிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூதாட்டி

கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 72). இவர் அந்தப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கோவை வந்த இவர் உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்தார்.

அவர் நஞ்சம்மாளிடம், உங்களை எனக்கு நன்றாக தெரியும், நீங்கள் போடிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வருகிறீர்கள் அல்லவா என்று கேட்டு உள்ளார். உடனே அவர் நான் போடிபாளையம் அருகேதான் வசித்து வருகிறேன், தற்போது நான் ஊருக்கு தான் செல்கிறேன் நீங்கள் வருகிறீர்களா என்று கேட்டு உள்ளார்.

ஓய்வூதிய திட்டம்

உடனே நஞ்சம்மாளும் சம்மதம் தெரிவித்து அந்த நபருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். மூதாட்டியிடம் பேசியபடி சென்ற அந்த வாலிபர், நீங்கள் பிரதமரின் ஓய்வூதிய திட்டத்துக்கு விண்ணப்பித்து உள்ளீர்களா என்று கேட்டு உள்ளார். அவ்வாறு விண்ணப்பித்தால் மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த நஞ்சம்மாள், அந்த திட்டத்துக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, நானே விண்ணப்பித்து கொடுக்கிறேன் என்ற அந்த வாலிபர் கூறி உள்ளார். அத்துடன் புகைப்படம் உள்ளதா என்று கேட்டு உள்ளார். அதற்கு நஞ்சம்மாள் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

செயினை கழற்றி கொடுத்தார்

உடனே வாகனத்தை சுந்தராபுரம் அருகே நிறுத்தி, நஞ்சம்மாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அப்போது அவருடைய கழுத்தில் செயின் இருந்தது. அதற்கு அந்த வாலிபர், செயின் அணிந்த புகைப்படத்தை வைத்து விண்ணப்பித்தால் உதவி தொகை கிடைக்காது, எனவே செயினை என்னிடம் கழற்றி கொடுங்கள், புகைப்படம் எடுத்த பின்னர் அதை அணிந்து கொள்ளுங்கள் என்றார்.அந்த மூதாட்டியும் தான் அணிந்து இருந்த 4 பவுன் செயினை கழற்றி அந்த வாலிபரிடம் கொடுத்தார். உடனே அவர் அதை ஒரு காகிதத்தில் வைத்து மடித்து கொடுப்பதுபோன்று நஞ்சம்மாளிடம் கொடுத்தார். பின்னர் அவர் விண்ணப்பித்தில் ஒட்டுவதற்காக ஸ்டாம்ப் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

நகை அபஸே்

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த வாலிபர் வரவில்லை. உடனே நஞ்சம்மாள் அந்த வாலிபர் கொடுத்த காகிதத்தை திறந்த பார்த்தபோது அதற்குள் செயின் இல்லை. அதற்கு பதிலாக சிறு சிறு கற்கள் மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story