கைரேகை பார்த்து குறி சொல்வதாக மூதாட்டியிடம் நகை அபேஸ்
நெல்லையில் கைரேகை பார்த்து குறி சொல்வதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..
நெல்லையில் கைரேகை பார்த்்து குறி சொல்வதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..
கைரேகை பார்த்து..
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கீழபாட்டம் ஜெயன்நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் சண்முகத்தாயிடம் நைசாக பேசி, உங்களுக்கு நான் கைரேகை பார்த்து குறி சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
நகை அபேஸ்
அதை நம்பிய சண்முகத்தாயும் தனது கையை காண்பித்தார். அப்போது அவரிடம் மர்மநபர், உங்களுக்கு ஒருவர் செய்வினை வைத்துள்ளார். இதனால் தான் உங்களால் சரியாக நடக்க முடியவில்லை. அதை சரிசெய்ய வேண்டுமானால், உப்பும், அதில் எழுதுவதற்கு தங்க நகையும் தர வேண்டும். அதை அருகில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்து தருகிறேன் என்று கூறி உள்ளார்.
உடனே சண்முகத்தாய் தனது 6 கிராம் தங்க நகையை அந்த நபரிடம் கொடுத்து உள்ளார். இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகத்தாய் இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைரேகை பார்த்து குறி சொல்வதாக கூறி மூதாட்டியிடம் மர்மநபர்கள் நகை அபேஸ் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.