மறுமணம் செய்து ஆந்திர பெண்ணிடம் நகை-பணம் மோசடி


மறுமணம் செய்து ஆந்திர பெண்ணிடம் நகை-பணம் மோசடி
x

மறுமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த கணவர் மீது டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் ஆந்திர பெண் புகார் மனு அளித்துள்ளார்.

வேலூர்

புகார் மனு

ஆந்திர மாநிலம் திருப்பதி நாகலாபுரம் பகுதியை சேர்ந்த ரம்யா (வயது 38) என்பவர் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமியிடம் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து எனக்கு மறுமணம் செய்ய தாயார் முடிவு செய்தனர்.

இதையடுத்து ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டு வரன் பார்க்கப்பட்டது. அப்போது திருப்பத்தூரை சேர்ந்த வினோத்குமார் என்பவர் காட்பாடியில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிவதாக கூறி என்னை பெண் பார்த்தார்.

பணம், நகை மோசடி

இதையடுத்து என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது 50 பவுன் நகைகளையும், 4 கிலோ வெள்ளி பொருட்களையும் சீதனமாக கொடுத்தனர். பின்னர் நாளடைவில் பல்வேறு காரணங்களை கூறி பலமுறை பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து எனது கையொப்பத்தை பயன்படுத்தி மோட்டார்சைக்கிளும் வாங்கிக்கொண்டார். இதுகுறித்து நான் கேட்டபோது என்னை துன்புறுத்தினார். மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து என்னை தாக்கினார். அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது, பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. இதற்கெல்லாம் அவருடைய நண்பர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார். என்னை ஏமாற்றி நகை, பணம், கார், மோட்டார்சைக்கிள் போன்றவற்றை மோசடி செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story