மூதாட்டியிடம் நகை பறிப்பு
சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி பார்வதி(வயது 78). சம்பவத்தன்று இவர், பாளையங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பார்வதியிடம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும். அவ்வாறு புகைப்படம் எடுக்கும் போது, தங்க நகை அணிந்திருக்கக்கூடாது, எனவே அதை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளனர். இதைநம்பிய பார்வதி, தான் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை கழற்றினார். அப்போது அவர்கள் 2 பேரும் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பார்வதியிடம் நகை பறித்தது சேத்தியாத்தோப்பு அடுத்த முடிகண்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் சரத்குமார்(27), மாரிமுத்து(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.