கடையத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்தமூதாட்டியிடம் நகை பறிப்பு
கடையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்த 5 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
கடையம்:
கடையத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்த 5 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
தென்காசி மாவட்டம் கடையம் கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் சிவகாமி அம்மாள் (வயது 87). அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரமு என்ற பிரம்மநாயகம் (61).
நேற்று முன்தினம் பகலில் சிவகாமி அம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு பிரம்மநாயகம் சென்றார். அவர் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு சிவகாமி அம்மாளிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் 50 ரூபாயை கொடுத்தார். ஆனால் பிரம்மநாயகம் தனக்கு ரூ.1,000 வேண்டும் என்று கூறினார்.
5 பவுன் நகை பறிப்பு
இதையடுத்து அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக சிவகாமி அம்மாள் வீட்டின் பின்பக்க கதவை திறக்க முயன்றார். அப்போது, பிரம்மநாயகம், சிவகாமி அம்மாளை இழுத்து கட்டிலில் தள்ளி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு ஆகியவற்றை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாமி அம்மாள் சத்தம் போட்டார். உடனே அவரது வாயில் துணியை வைத்து அமுக்கிவிட்டு பின்பக்க வழியாக வெளியேறினார். பின்னர் பிரம்மநாயகம் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் 5 பவுன் நகையை போட்டு விட்டு ஓடிவிட்டார்.
போலீசார் விசாரணை
அக்கம்பக்கத்தினர் வந்து சிவகாமி அம்மாளை மீட்டனர். இதுகுறித்து கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் முப்புடாதி, ரஞ்சித் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பிரம்மநாயகம் வீட்டிற்கு சென்று தண்ணீர் தொட்டியில் போட்டுச் சென்ற 5 பவுன் நகையை மீட்டனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.