நெல்லிக்குப்பத்தில் துணிகரம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


நெல்லிக்குப்பத்தில் துணிகரம்    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு    மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,


முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள்

நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி உமா (வயது 31). தனியார் நிறுவன ஊழியரான ராஜேஷ் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். உமா மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். முன்னதாக அவர், காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவு நேரத்தில் முகத்தை துணியால் மறைத்தபடி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பேர் உமாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனால் பதறிய உமா இதுபற்றி தனது கணவருக்கும், நெல்லிக்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமாவிடம் விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் கூப்பர் நகை பறிப்பு சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடி நின்றது.

பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்து வந்து நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் 2 பேர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story