திண்டிவனம் அருகே பரபரப்புகத்திமுனையில் தாய், மகளிடம் 20 பவுன் நகை பறிப்புவீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை


திண்டிவனம் அருகே பரபரப்புகத்திமுனையில் தாய், மகளிடம் 20 பவுன் நகை பறிப்புவீடு புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தி முனையில் தாய், மகளிடம் 20 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விழுப்புரம்


மயிலம்,

அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியோ ராஜேஷ் மனைவி சித்ரா குமாரி (வயது 48). இவர் மயிலம் அருகே உள்ள பாதிராப்புலியூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சித்ரா குமாரி தனது மகன் பிரகாஷ்ராஜ், மகள் கிருத்திகா, உறவினர் சாந்தலட்சுமி ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

கத்திமுனையில் மிரட்டல்

அப்போது நள்ளிரவு 2 மணியளவில் சட்டை அணியாமல் லுங்கி மற்றும் தலைப்பாகை அணிந்து வந்த மர்மநபர்கள் 3 பேர் வீட்டின் பின்பக்க கதவு தாழ்பாளை இரும்பு கம்பியால் நெம்பி திறந்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சித்ரா குமாரியின் கழுத்தில் கிடந்த 18½ பவுன் நகைகளை பறித்தனர்.

இதில் திடுக்கிட்டு எழுந்த சித்ரா குமாரி, திருடன், திருடன் என சத்தம் போட முயன்றார். ஆனால் அதற்குள் சுதாரித்து கொண்ட மர்மநபர்களில் ஒருவர், சித்ரா குமாரியின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் செய்வதறியாது அவர் பயத்தில் உறைந்தார். இதை தொடர்ந்து, அங்கு படுத்து தூங்கிக்கொண்டிருந்த கிருத்திகா கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தடயங்கள் சேகரிப்பு

இதையடுத்து சித்ராகுமாரி இச்சம்பவம் குறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் ராக்கி சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்து பின்பக்கமாக ஓடி விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், அசாருதீன் ஆகியோர் நகை பறிப்பு சம்பவம் நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்துச் சென்றனர்.

போலீசார் வலைவீச்சு

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கத்திமுனையில் தாய், மகளிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story