டாக்டர் வீட்டில் நகை திருட்டு
குற்றாலத்தில் டாக்டர் வீட்டில் நகை திருடு போனது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரந்திர் சக்கரபதி (வயது 53). டாக்டரான இவர் தென்காசி அருகே மத்தளம்பாறையில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குற்றாலம் ராமாலயத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவர் கடந்த 13-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார். நேற்று முன்தினம் காலையில் இவரது வீட்டில் வேலை பார்க்கும் வேலம்மாள் என்பவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பிரந்திர் சக்கரபதிக்கு தகவல் கொடுத்துள்ளார். ஏற்கெனவே அவர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவுடன் தனது செல்போனை இணைத்து வைத்துள்ளார். எனவே அவர் செல்போனில் உள்ள கேமரா மூலம் வீட்டை பார்த்தார்.
அதில் சம்பவத்தன்று இரவில் மர்மநபர் உள்ளே புகுந்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவர் உடனடியாக சென்னையில் இருந்து குற்றாலத்திற்கு வந்தார். வீட்டில் சென்று பார்த்த போது 115 கிராம் தங்க நகைகள், 4 லேப்டாப்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.