விழுப்புரத்தில் பட்டப்பகலில் துணிகரம்:மளிகை வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் மளிகை வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மளிகை வியாபாரி
விழுப்புரம் பொன்அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்சேட் (வயது 52). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவர், தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றார்.
அங்கு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மாலை 3 மணியளவில் விழுப்புரம் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
நகை திருட்டு
உடனே அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.