மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
திருமங்கலத்தில் மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரபிதீன் முகமது ராஜா (வயது 53). இவர் மதுரை மாநகராட்சியில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பானு. இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி காலையில் கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்று விட்டனர். மகள்கள் கல்லூரிக்கு சென்று விட்டனர். அன்று மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் ரொக்கப் பணம் ரூ.25 ஆயிரம், செல்போன், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
திருமங்கலம் நகர் பகுதியில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கடந்த 10 நாட்களில் மட்டும் 3 இடங்களில் கொள்ளை நடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆதலால் தொடர்ந்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.