2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
கோவை அருகே ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேரின் வீடுகளில் மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடி சென்றனர்.
கோவை அருகே ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேரின் வீடுகளில் மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை திருடி சென்றனர்.
ஐ.டி. ஊழியர்
கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சின்னியம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த யுவராஜ், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கசங்கிலி, கம்மல் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம், மேலும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி, மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து யுவராஜ் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூப்பர்வைசர் வீட்டில் திருட்டு
இதேபோல் அன்னூர் அருகே உள்ள மாசாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது இவர்களது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதற்கிடையில், தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சதீஸ்குமார் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.