அத்தனூா் அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
வெப்படை அருகே அத்தனூர் அம்மன் கோவிலில் நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பள்ளிபாளையம்
அம்மன் கோவிலில் திருட்டு
வெப்படை அருகே வால்ராசம்பாளையம் பகுதியில் அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக இருக்கும் மூர்த்தி வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு அருகில் உள்ள அறையில் தூங்க சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம்போல் மூர்த்தி கோவிலை திறந்தார். அப்போது அம்மன் கோவில் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் தாலி பொட்டு, 20 கிராம் வெள்ளிக்கொடி மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் வெப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுகுமார், வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
வலைவீச்சு
இதில் முகமூடி அணிந்த கொள்ளையர் ஒருவர் கோவிலின் பின்புறம் உள்ள சுவர் மீது ஏறி குதித்து, கோவிலில் நுழைவதும், அதன் பிறகு கோவிலில் கருவறை பகுதியில் இருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி அணிந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் வெப்படை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.