அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
அரசு பஸ் டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முசிறியில் கண்டக்டரிடம் கைவரிசை காட்டப்பட்டது. திருச்சியில் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.
அரசு பஸ் டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முசிறியில் கண்டக்டரிடம் கைவரிசை காட்டப்பட்டது. திருச்சியில் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.
அரசு பஸ் டிரைவர்
மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள ஊத்துக்குளி ஆவிகாரன் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). அரசு பஸ் டிரைவரான இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் சுரேஷ்குமார் நேற்று பணி முடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் திருட்டு
முசிறியை அடுத்த மாவலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). அரசு பஸ் கண்டக்டரான இவர் வங்கியில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அதனை மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் வைத்து இருந்தார். பின்னர் முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கு உள்ள கடையில் அயன்பாக்ஸ் வாங்கினார். இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த பணத்தை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில வாலிபர்கள்
துறையூரை அடுத்த பச்சமலை அருகே உள்ள கோம்பை ஊராட்சி, வண்ணாடு ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராமங்களில் வடமாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் தங்க நகையை பாலீஷ் செய்து தருவதாக கூறி நகையை ஒரு வித திரவத்தில் போட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை முயற்சி
திருச்சி காஜா பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அவர் அந்த ஏ.டி.எம். ஏந்திரத்தில் கிரடிட் கார்டு போடும் இடத்தில் கைகளால் சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து ஆட்கள் வருவதை அறிந்து அவர் ஓடிவிட்டார். இதைகண்ட ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.